கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள சித்தானங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கலியமூர்த்தி என்பவரின் மகன் மணிவண்ணன்(28). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராகப் பணி செய்து வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து வருவதற்காக வயல்வெளி பகுதிக்குச் சென்றுள்ளார். அவர் வந்து கொண்டிருந்தபோது திடீரென காட்டுப் பன்றி ஒன்று மணிவண்ணனை கண்டு கோபத்துடன் துரத்தியது. இதைப் பார்த்த மணிவண்ணன் பன்றியிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் விடாமல் அதிவேகமாக அவரை விரட்டிச் சென்ற காட்டுப் பன்றி மணிவண்ணன் காலைக் கடித்தது.
அப்போது வலியால் மணிவண்ணன் கதறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் திரண்டு ஓடி வந்தனர். கூட்டத்தைப் பார்த்து அந்தக் காட்டுப் பன்றி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பிறகு காயமடைந்த மணிவண்ணனை மீட்ட விவசாயிகள், சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.