சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி, 8ஆம் தேதி காலை பெங்களூருவிலிருந்து புறப்பட்டு 9ஆம் தேதி காலை சென்னை வந்தடைந்தார் சசிகலா. பல்வேறு இடங்களில் அவருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. குறிப்பாக பர்கூர் பகுதியில் சசிகலா கார் மீது ஒரு பெரும் ஆப்பிள் மாலை க்ரேன் உதவியுடன் போடப்பட்டது. இது பெரும்பாலமானோரின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது சசிகலா சென்னை தி.நகரில் இருந்து வருகிறார். வழக்கு ஒன்றில் சம்மந்தப்பட்டு அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நேற்று (10.02.2021) சசிகலாவை சந்தித்துச் சென்றார்.
இந்நிலையில் இன்று, பர்கூரில் சசிகலா காருக்கு ஆப்பிள் மாலை போட்ட மூ.சீனிவாசன், ஆதரவாளர்களுடன் சென்னை தி.நகரில் சசிகலா தங்கியிருக்கும் இல்லம் முன்பாக பூசனி, தேங்காய் ஆகியவற்றை உடைத்து திருஷ்டி கழித்தார்.
பின்னர் நக்கீரன் இணையத்திடம் பேசிய அவர், “நாங்கள், ‘தமிழக தியாகத் தலைவி சின்னம்மா பேரவை’யில் இருந்து வருகிறோம். சசிகலா வரும்போது பர்கூரில் 500 கிலோ எடைகொண்ட ஆப்பிள் மாலையை அவருக்குச் செலுத்தினோம். நாங்கள் முதலில் சசிகலா வரும்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்கத் திட்டமிட்டு அனுமதியெல்லாம் வாங்கினோம். ஆனால், கடைசி நேரத்தில் சில இடர்பாடுகளால் அதுமுடியாமல் போனது. அதனால், உடனடியாக ஆப்பிள் மாலைக்கு ஐடியா செய்து, காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி க்ரேன் மூலம் சசிகலா காருக்கு ஆப்பிள் மாலை அணிவித்தோம்.
மேலும் எங்கள் மாவட்ட, மாநில நிர்வாகிகள் இணைந்து சசிகலா உடல்நிலை சரியில்லாத காலத்தில் அவரை சந்திக்க பலமுறை பெங்களூரு சென்றோம். ஆனால், கரோனா காரணத்தினால் அவரை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது. மருத்துவமனையிலிருந்து வந்து ரிசார்டில் ஓய்வெடுத்தார். அங்கேயும் அவரை பார்க்க நள்ளிரவு 12 மணிக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும் அவரை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை.
பர்கூர் மட்டுமின்றி எங்கள் பேரவை சார்பாக காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி அருகிலும், சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டை அருகே பணிமலர் கல்லூரி அருகிலும் சிறப்பான முறையில் சசிகலாவை வரவேற்றோம்.
பல கோடி மக்களின் கண் திருஷ்டி பட்டிருக்கும் எனும் காரணத்தினால், இன்று சசிகலாவை நேரடியாகச் சந்தித்து கண் திருஷ்டி போக்க கல்யாணி பூசினியையும், தேங்காயும் சூரைக்காயாக உடைத்து கண் திருஷ்டி எடுத்தோம். சசிகலா நலம்பெற்று தமிழக முதல்வராக அரியணை ஏறவேண்டும். இனி எதிரிகளால் சசிகலாவை ஒன்றும் செய்ய முடியாது. சசிகலாவை நிரந்தர முதல்வராக்கும்வரை எங்களது பேரவை ஓயாது என்பதை இந்த நேரத்தில் பதிவுசெய்கிறேன். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் வந்து சசிகலாவை சந்திக்க நினைத்தோம். ஆனால், சந்திக்க முடியவில்லை. அதனால் மனுவாகக் கொடுத்துள்ளோம் வெகுவிரைவில் அழைத்தால், நாங்கள் மாநில நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை சந்திக்கத் தயாராக உள்ளோம்.
எங்களை பெரும்பாலானோர் அமமுகவினர் என நினைத்துகொள்கிறார்கள். அமமுக வேறு எங்கள் பேரவை வேறு. ‘தமிழ்நாடு தியாக தலைவி சின்னம்மா பேரவை’ தனி இயக்கம். இது தமிழ்நாடு முழுக்க இயங்கிவருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்தார்.