முதல்கட்ட ஊரடங்குக்கு முன் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை மட்டுமே கரோனா பாதிப்பு மாவட்டமாக மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கிற்குப் பின், தமிழகத்தில் 3 மாவட்டங்கள் மட்டுமே நோய்த்தொற்று இல்லாத மாவட்டங்களாக நீடித்தன. அதில், ஒன்றான புதுக்கோட்டையில் புதிதாக ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட, மற்றொரு மாவட்டமான தர்மபுரியிலும் நோய்த்தொற்று உருவாக, கிருஷ்ணகிரி மட்டும் வெள்ளி வரை தாக்குப்பிடித்து நின்றது. பரிசோதனைகளை அதிகரித்தால் நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும், தரமான-சத்தான உணவும் வழங்கப்படுகிறது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் பெட், காற்றோட்டம், கழிப்பிட வசதிகளும் நன்றாக உள்ளன என்கிறார்கள் சிகிச்சை பெற்றவர்கள். டிஸ்சார்ஜ் ஆகிறவர்களின் எண்ணிக்கையும் நம்பிக்கை தருகிறது. ஆனால், பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இல்லாததாலும், சுகாதார அமைப்புகளின் எச்சரிக்கையினாலும் மூன்றாம் கட்ட நோய்த்தொற்றை நோக்கி நகர்ந்துள்ளது தமிழகம். இதனை அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிக்கவில்லை.
இதுவரை, மரண எண்ணிக்கை தமிழகத்தில் கட்டுக்குள் உள்ள நிலையில், நோய்த்தொற்று பரவினால் மரணத்தின் எண்ணிக்கையும் பரவும் என்பதால்தான் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பல நகராட்சிகளிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு என 26ந் தேதி முதல் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.