ஆம்பூர் நகராட்சியில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் சமமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகராட்சியில் நூற்றாண்டாக ஒரு மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. நகரமன்ற தலைவராக ஒருமுறை இந்து மதத்தை சேர்ந்தவரை தேர்வு செய்தால் அடுத்தமுறை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரை தேர்வு செய்யவார்கள். இந்த மரபு இதுவரை மீறப்பட்டதில்லை. ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின்போதும் ஆளும்கட்சியாக யார் இருந்தாலும் அந்த மரபை பின்பற்றி வருகின்றனர். அதன்படி கடந்த 2011 – 2016ல் இந்து மதத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நகரமன்ற தலைவராக இருந்ததால் இந்தமுறை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரை நகரமன்ற தலைவராக்க வேண்டும்.
ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. தேர்தலின்போது திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 36 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. அதிமுக 25 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது. மீதியிடங்களுக்கு நிற்க அதிமுகவினர் யாரும் முன்வரவில்லை. தேர்தலின் முடிவில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், பாஜக ஒன்று, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மமக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சைகள் 8 என வெற்றி பெற்றனர். தனித்து நகர மன்ற தலைவர், நகர மன்ற துணை தலைவர் பதவியை பிடிப்பதற்கான பலத்தோடு ஆளுங்கட்சியான திமுக உள்ளது. இதனால் நகர மன்ற தலைவர் பதவியை பிடிக்க திமுகவில் பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் போட்டிப்போட்டு சேர்மனாகலாம்.
ஆம்பூர் நகர திமுக கமிட்டி, மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷப்பீர் அகமத்வை சேர்மனாக்க வேண்டும் என்கிறது. ஆம்பூரில் பிரபலமான தனியார் காலணி தொழிற்சாலை உரிமையாளர் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆம்பூர் சேர்மன் யார் என்பதை அவர் மறைமுகமாக தீர்மானிப்பார். அவர் திமுகவை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ஏஜாஸ் அகமத் வை சேர்மனாக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் அதற்கு துணையாக நிற்கிறார். 2006-2011ல் நஜீர் அஹமத் வை சேர்மனாக்க வேண்டும் எனக்கேட்டார் அந்த தொழிலதிபர். அதன்படி நஜீர் அஹமத் சேர்மனாக்கினோம், இவரால் கட்சிக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. நகரத்தில் 10 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது திமுக. நகரத்தில் அதிமுக பலமானதோடு, பாஜக வளர்ந்தது. இப்போது ஏஜாஸ் அஹமத் அல்லது நிஜார் அஹமத்வை முன்னிறுத்துகிறார் அந்த தொழிலதிபர். அவர் சொல்வதுப்போல் செய்தால் அரசியல்ரீதியாக கட்சிக்கு இங்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை தலைமை கவனத்தில் எடுக்க வேண்டும் என்கிறார்கள் திமுகவின் ஒருதரப்பினர்.
திருப்பத்தூர் மாவட்ட அரசின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ யாரை தேர்வு செய்து சிபாரிசு செய்யப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், துரைமுருகன் சிபாரிசை ஏற்கபோகிறதாறா? அமைச்சர் எ.வ.வேலு சிபாரிசை ஏற்கபோகிறாரா? மூவரில் யார் சேர்மன் என்கிற பெரிய எதிர்பார்ப்பு ஆம்பூர் நகரத்தில் ஏற்பட்டுள்ளது.