கழுத்தறுபட்ட நிலையில் இரு முதியவர்களின் சடலங்கள் - அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஒரே இடத்தில் இரு முதியவர்களின் சடலங்கள் கிடப்பதாக தகவல் பரவியது. இறந்து கிடந்த இரு முதியவர்களின் கழுத்துப் பகுதி பிளேடால் அறுபட்டு ரத்தம் வெளியேறி இருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மணமேல்குடி போலிசார் சடலங்களை கைப்பற்றியுள்ளனர்.
முதியவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பெருமகளூர் கிராமத்தைச் சேர்ந்த கூடை முடையும் தொழிலாளிகள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களோ.. முதியவர்கள் இருவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாக சொல்வது இந்த வழக்கை முடித்து வைக்க செய்யும் முயற்சியாக தெரிகிறது.
இந்த முதியவர்களிடம் பணம் இருப்பதை அறிந்த யாரோ மர்ம நபர்கள் முதியவர்களை தாக்கி பணத்தை பறித்துக் கொண்டு கழுத்தை அறுத்து விட்டு சென்றிருக்கலாம். அந்த வகையிலும் விசாரணை செய்ய வேண்டும் என்றனர்.
இதே போல கடந்த வாரம் புதுக்கோட்டை திருவப்பூர் ரயில் பாதை அருகே இரு இளைஞர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது இரு முதியவர்கள் கழுத்து அறுபட்டு இறந்திருப்பதும் தொடரும் சம்பவங்களால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.
- இரா.பகத்சிங்