சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகராத்தில் பிரச்சனை வெடித்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து பிரச்சனை நிகழ்ந்துவருகிறது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்றது. இதற்கான முடிவுகளை நேற்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில், பொறியியல் படிப்பிற்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதிய 1,15,000 பேரில், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்ச்சியை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
"மாணவர்கள் ஆன்லைன் புத்தகங்களைப் பார்த்து காப்பி அடித்து தேர்வு எழுதியுள்ளதாகவும், காப்பி அடித்த மாணவர்களின் தேர்வு முடிவை மட்டும் நிறுத்தி வைத்துள்ளதாகவும்" பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களுக்குத் தேர்வு பெற்றுள்ள மாணவர்கள், தங்களின் வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதும்போது முகத்தை வேறு திசைகளில் திருப்பினால், இரண்டு முறை 'மைக்ரோசாஃப்ட்' செயலி வார்னிங் கொடுக்கும். அதற்கு மேல் சென்றால் அது 'காப்பி' என்று முடிவெடுத்துவிடும். அதன் அடிப்படையில்தான், இந்தத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.
கரோனா லாக்டவுனில், தனியார் கல்லூரிகள் பேராசிரியர்களை நீக்கிய காரணத்தாலும் அந்தப் பாடத்திட்டங்கள் நடத்தப்படாமல் இருந்த காரணத்தாலும் இது போன்ற தவறுகளை மாணவர்கள் செய்வதாக கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.