Skip to main content

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் வெளியிட விதித்த தடை நீக்கம்! ஐகோர்ட் உத்தரவு!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மருத்துவ மேற்படிப்புக்கு, தொலைதூர, கடினமான மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 

 high court


இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராகப் பணியாற்றி வரும் மருத்துவர் ஜி.பி.அருள்ராஜ், தனக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வுக்கு அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

இந்த வழக்கை, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து மே 18- ஆம் தேதிக்குள் முடிவெடுக்க தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
 

மேலும்,  மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை ஜூன் 8- ஆம் தேதி வரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
 

இந்நிலையில்,  மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏற்கனவே கலந்தாய்வு துவங்கி விட்டதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 4- ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை முடிக்க வேண்டும் என்பதால் தகுதிப்பட்டியலை வெளியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் தரப்பில் நீதிபதி சுந்தரிடம் முறையிடப்பட்டது.
 

http://onelink.to/nknapp

 

பட்டியல் வெளியிட்ட பின் ஏதேனும் குறையிருந்தால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என மத்திய - மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சுந்தர், தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த இடைக்காலத் தடையை நீக்கி, பட்டியலை வெளியிட  அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்