தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அதேபோல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவு வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை தமிழக அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், கட்சிப் பிரமுகர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், திரைப் பிரபலங்கள், விளையாட்டுப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகனுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கடந்த ஏப்ரல் 8- ஆம் தேதி அன்று அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், துரைமுருகன் இன்று (14/04/2021) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.