விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரிபிரியா வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது: “இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குறுங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறார் என்ற பகுதியில் பட்டாசு தயாரிப்பு பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டது.
அங்கு பணியில் இருந்த 9 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலே 5 பேர் பலியாகினர். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறும் பட்சத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் கூலி தொழிலாளர்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்த என்ன முயற்சிகள் மேற்கொள்ளபட்டன? அந்தத் துறை அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் என்ன? இறந்த பிறகு நிதி வழங்குவதை விட இறக்கும் முன் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஒரு குடும்பம் காப்பாற்றப்படும்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பண உதவியோடு அரசு நிறுத்திக்கொள்ளாமல், இந்தத் தீ விபத்திற்கு யார் காரணம்? யார் அலட்சியத்தால் இத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டன? தீ விபத்தின்போது செயல்பட வேண்டிய உபகரணங்கள் என்னவாகின? என்பது போன்ற அனைத்தையும் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், இனியும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க இயலும். மேலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார தொழிலாக பட்டாசு உற்பத்தி தொழில் இயங்குவதால் அம்மக்களைக் காக்க முறையான செயல் திட்டங்களை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிக கவனம் செலுத்துவது பல மக்களின் வாழ்க்கையை விபத்தில் இருந்து காப்பாற்றும்” எனத் தெரிவித்தார்.