Skip to main content

திருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

Wedding


மணப்பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே, புதுமணத் தம்பதிகள் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
 


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கெங்கவல்லியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை (மே 24) காலையில் நடத்த கடந்த ஜனவரி மாதமே முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணப்பெண், மணமகன் ஆகிய இருதரப்பு வீட்டாரும் செய்து வந்தனர்.


திருமண நாள் நெருங்கியதை அடுத்து மணப்பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் 12 பேர் கொண்ட குழுவினர், ஒரு வேன் மூலமாக சென்னையில் இருந்து கடந்த 21ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வரும் நபர்களை மாவட்ட, மாநகர எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கல்யாணக் கனவுகளுடன் சொந்த ஊர் திரும்பிய அந்த இளம்பெண்ணுக்கு, சேலம் மாவட்ட எல்லையான நத்தக்கரை சோதனைச்சாவடியில் வைத்து சுகாதாரத்துறையினர் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்தனர். 


இந்தப் பரிசோதனையில், அப்பெண்ணுக்கு நோய்த்தொற்று இருப்பது மே 23ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகளுடன் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகளையும் வழங்கி அனுப்பி வைத்தனர். 
 


என்றாலும், குறித்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தி முடிப்பதில் இருதரப்பு பெற்றோரும் உறுதியாக இருந்தனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆட்சியர் ராமன், சில கட்டுப்பாடுகளுடன் திருமணத்தை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தார். 


இதையடுத்து, உள்ளூரில் உள்ள ஒரு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) காலை 6.30 மணியளவில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. திருமணத்தில் அதிகளவில் கூட்டம் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததால், இருதரப்பில் இருந்தும் மொத்தம் 28 பேர் மட்டுமே கலந்து கொண்டு, மணமக்களை மங்கல அட்சதைத் தூவி வாழ்த்தினர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.


மணமகள், மணமகன் மற்றும் இவ்விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவருமே அவரவர் வீடுகளில் தொடர்ந்து 28 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நோய்த்தொற்று ஏற்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து திருமண விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் மணமகள், மணமகன் ஆகியோர் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

http://onelink.to/nknapp


குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடத்த மனித நேயத்துடன் அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர், மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே புதுமணத் தம்பதிகள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமும் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

 

சார்ந்த செய்திகள்