நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் எனவும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனவும் வைகோ தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மோடிக்கு சொல்கிறேன். இந்த கரும் மேகங்களைவிட எங்கள் கருங்கொடி படலங்கள் உங்கள் விமானத்தை உள்ளே விடாது. தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்குக் கூட மோடியை உள்ளே விடமாட்டோம். மத்திய அரசின் அலுவலங்கள் முற்றுகையிடப்பட வேண்டும். மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். தேர்தல் முடியட்டும். இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். மாநில கட்சிகளின் துணையோடு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். மேகதாது அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்படும்.
என்ன செய்ய முடியும் இவர்களால் என்று மோடி நினைக்கிறார். அணை கட்டுவோம் என்று நினைக்கிறார். அணையை கட்டினால் அணையை உடைக்க முடியாது. இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்துபோகும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு பேசினார்.