அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. அப்பொழுது இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இருப்பினும் இரு தரப்பு தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்க, கூட்டணி எல்லாம் மேலே உள்ள டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரங்கெட்ட அண்ணாமலை எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நடத்தப்படும் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் அதே நேரம் அண்ணாமலை விவகாரம் தொடர்பாகவும் விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர் பதவி என்பது ஒரு பொம்மையை போன்றது. பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.