காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., இறுதி ஆண்டு படித்து வந்தார். +2 தேர்வு முடிந்தவுடன் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சிக்கு சென்றபோது சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஒரு மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே இவர்களின் நட்பு காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு சேர்ந்தனர். படிப்பதாக கூறி கடந்த 4 வருடங்களாக மதுரையில் பல இடங்களில் இவர்கள் இருவரும் சுற்றியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப் மற்றும் முகநூலிலும் இவர்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதேபோல் டப்மாசிலும், டிக்டாக் மியூசிக்கல் ஆப்பிலும் தங்களது புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர்.
இவர்கள் காதலிப்பதும், மதுரையில் பல இடங்களில் சுற்றியிருப்பதும் ராம்குமார் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. ராம்குமார் தாயார் விருப்பப்படி சிந்துஜாவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். சிந்துஜா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரை பிடித்துவிட்டதால் ராம்குமார் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இறுதியில் மாணவி ஏழை என்று தெரியவர ராம்குமார் பேசுவதை குறைத்துக்கொண்டார், சிந்துஜா அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அவரை தூக்கி எறியும் விதத்தில் பேசியிருக்கிறார் ராம்குமார். இதனைத் தொடர்ந்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி படம் எடுத்து அதனை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
ராம்குமாரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கடந்த 31ஆம் தேதி பேரீச்சம் பழத்தில் எலிமருந்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தனது தற்கொலை முடிவுக்கு தனது காதலன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காதலன் ராம்குமாரை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என மதுரை ராஜாஜி மருத்துவமனை முன் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.