மூன்று முறை வருகை மாற்றப்பட்ட நிலையில், நான்காவதாக நாளை (10 -ஆம் தேதி) குமாி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்கு நாகர்கோவில் வருகிறாா். மதியம் 3 மணிக்கு கலெக்டா் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா். இதில் குறிப்பிட்ட அளவு அதிகாாிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனா். ஆனால், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் யாரும் அதிமுகவுக்கு இல்லாததால் எதிா்க்கட்சியான தி.மு.க காங்கிரசுக்கு தான் தலா மூன்று விதம் ஆறு எம்.எல்.ஏக்கள் உள்ளனா்.
இந்த நிலையில், அந்த எம்.எல்.ஏக்கள் யாரும் முதல்வா் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா். இது குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமாா், பிாின்ஸ், விஜயதரணி ஆகியோர் கூறும் போது, குமாி மாவட்டத்தில் புற்று நோய் நாளுக்கு நாள் அதிகாித்துவருகிறது. இதனால் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென்று சட்டசபையில் நாங்கள் கூறினோம். ஆனால் அரசு அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
இதேபோல் சட்டக்கல்லூாி, விவசாயக் கல்லூாி, மீன்வளக்கல்லூாி குறித்து ஒவ்வொரு கூட்டத்தொடாிலும் வலியுறுத்தினோம் எந்த நடவடிக்கையும் இல்லை. குமாி மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு, கடல் அாிப்பு தடுப்புச் சுவா் கட்ட வலியுறுத்தினோம். காணாமல் போன மீனவா்களை தேடுவதற்கு ஹெலிகாப்டா் வேண்டுமென்று கேட்டோம். அதேபோல் ஏ.வி.எம் கால்வாயை தூா்வாாி நீா்போக்குவரத்து ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ரப்பா் தொழிற்சாலை மற்றும் கேரளா அரசுடன் பேசி நெய்யாா் இடது கரை சானலில் குமாி மாவட்டத்திற்கு தண்ணீா் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டாம்.
குளச்சல் துறைமுகத்தை விாிவுபடுத்த வேண்டும். குமாி மாவட்டத்தில் உள்ள எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. அதைச் சாிசெய்யக் கேட்டோம். 8 ஆண்டுகளாக மந்தமாக நடந்து கொண்டிருக்கும் நாகா்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என இப்படி 25-க்கு மேற்பட்ட திட்டங்களைக் குறித்து சட்டசபையிலும் முதல்வாிடமும் பேசி எந்தப் பலனும் குமாி மாவட்டத்துக்குக் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் நாங்க எல்லாம் தி.மு.க காங்கிரசை சோ்ந்தவா்கள் என்பதால் தான். இதனால் தான் குமாி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு புறக்கணிக்கிறது. எனவே, முதல்வா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என்றனர்.