சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (07/01/2022) மாலை 05.30 PM மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து எங்கள் ஆதங்கத்தை ஆளுநரிடம் பதிவு செய்தோம். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை என்பதை நாளை (08/01/2022) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைப்போம். நீட் தேர்வு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்பார். நீட் தேர்வு தேவை என்பதை நாளைய கூட்டத்தில் வானதி சீனிவாசன் வலியுறுத்துவார்.
பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து நாளையக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்த பா.ஜ.க. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.