முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்த மணியின் கூட்டாளி, அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் 1.40 கோடி ரூபாய்வரை வசூலித்து மோசடி செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 28). பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்து இருந்தார்.
அந்தப் புகார் மனுவில், ''தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த மணி (வயது 51) என்பவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, என்னிடம் 13 லட்சம் ரூபாய் வாங்கினார்.
ஆனால் அவர் உறுதியளித்தபடி எனக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர் தர முடியாது எனக் கூறிவிட்டார்.
இந்த மோசடிக்கு, ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த மணியின் நண்பர் செல்வகுமார் (வயது 49) என்பவரும் உடந்தையாக இருந்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனப் புகார் மனுவில் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
அதன்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணி, செல்வக்குமார் ஆகிய இருவரையும் தேடிவந்தனர். இதற்கிடையே மணி, முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் தலைமறைவான அவரை, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மணியின் கூட்டாளி செல்வகுமார் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், டிச. 24ம் தேதியன்று இரவு, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் செல்வகுமார் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மறுநாள் அதிகாலையில் காவல்துறையினர் செல்வகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ''போக்குவரத்து, வருவாய், கல்வித்துறை எனப் பல துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் நானும், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருமான நடுப்பட்டி மணியும் 1.40 கோடி ரூபாய் வாங்கினோம்.
அதில், இதுவரை 82 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டோம். தமிழ்ச்செல்வனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கினோம். ஆனால் அவருக்கு எங்களால் வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை'' என்று கூறியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
இதையடுத்து, செல்வகுமாரை சேலம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் அவரை, சங்ககிரி கிளைச்சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதமாக காவல்துறைக்கு போக்கு காட்டி வந்த செல்வகுமார் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.