Skip to main content

“ரெம்டெசிவிர் வாங்க 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது..” விற்பனையை பரவலாக்க ராமதாஸ் கோரிக்கை 

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

"You have to wait up to 20 hours to buy Remdesivir"  says Ramadoss

 


இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு இடங்களில் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டும் வருகிறது. கரோனாவின் இரண்டாவது அலையைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மிக முக்கியமானதாக இருக்கிறது. அதேபோல், கரோனா பாதித்தவர்களுக்கு அதன் தீவிரத்தைக் குறைப்பதற்கு ரெம்டெசிவர் எனும் மருந்து முக்கியப் பங்கை வகிக்கிறது. இதன் விலை வெளி சந்தையில் மிக அதிகமாக இருக்கிறது. அதனால், அரசு அதனை குறைந்த விலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விநியோகித்து வருகிறது. அதனை வாங்குவதற்கு கடுமையான கூட்ட நெரிசலும் இருக்கிறது. அதனால், அவற்றை சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

அந்த அறிக்கையில் அவர், “தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், தேவைப்படும் கரோனா நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசே அந்த மருந்தை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. அதேபோல், 18 வயது நிறைவடைந்தோருக்கு தடையின்றி தடுப்பூசி போடுவதற்காக ஒன்றரை கோடி டோஸ் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யவும் அரசு தீர்மானித்திருக்கிறது. கரோனா தடுப்புக்கான இந்நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

 

கரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. கரோனா இரண்டாவது அலையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைத்து மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மருந்தின் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, ரூ. 5,400 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்தின் விலை, தற்போது ரூ. 899 முதல் ரூ. 3,490 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பதுக்கல் காரணமாக ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. சில இடங்களில் ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ரெம்டெசிவிர் மருந்து, தேவைப்படுவோருக்கு வழங்கும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் 6 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து ரூ. 9,400 என்ற விலையில் விற்கப்படுகிறது. கரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரிடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த மருந்தை வாங்க 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ரெம்டெசிவிர் வாங்க பலர் முதல்நாள் இரவிலிருந்து விடிய, விடிய காத்திருப்பதைக் காண முடிகிறது.

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மருந்தை வாங்கிச் செல்வதற்காக நாள் கணக்கில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுபவர்கள் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து வாங்கிச் செல்வதில் பல இடையூறுகள் உள்ளன. அவற்றைப் போக்கும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் மே மாதம் ஒன்றாம் தேதி கரோனா தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை மட்டுமே நம்பி இருக்காமல், மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாக ஒன்றரை கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்ற நிலை உறுதி செய்யப்படும். அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி போட வரும்போது, அந்தக் கூட்டத்தைச் சமாளிக்க இப்போதுள்ள தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை போதாது.

 

எனவே, ஏற்கனவே உள்ள தடுப்பூசி மையங்களுடன் மினி கிளினிக்குகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்களை அமைத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட, தகுதியுள்ள அனைவருக்கும் மிகவும் விரைவாக தடுப்பூசி போடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்