
நேற்று (22.06.2021) மாலை சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரையடுத்த பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கக்கூடிய சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையின்போது எடப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி என்பவர் லத்தியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், தாக்குதலுக்குள்ளான முருகேசன் நேற்று மாலை அரசு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து முருகேசனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் இன்று காலைமுதலே குவிந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே சேலம் மாவட்டக் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி மற்றும் அவருடன் இருந்த காவல்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது விசாரணை அடிப்படையில் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, போலீஸ் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ''சாமானிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7க்கு முன்பு இருந்த மனநிலையிலிருந்து காவல்துறை மாற வேண்டும். தற்போது நடப்பது திமுக ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்'' என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இதேபோல் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு வியாபாரிகள் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.