சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்,
தமிழகத்தில் தாய் இல்லாமல் நடைபெறும் நல்லாட்சியை தாயைபோல அண்ணன் முதல்-அமைச்சர் எடப்பாடியார் நடத்தி வருகின்றார். ஒரு ஆண்டில் அம்மாவின் ஆட்சியை சிறப்பாக வழிநடத்தி 5208 கோப்புகளில் கையெழுத்து போட்டு கோப்புகள் தேங்கவிடாமல் வைத்துள்ளார்.
தமிழகத்தில் அம்மாவின் ஆன்மா இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சியை வழிநடத்தும். முதல்- அமைச்சர் எப்போதும் புன்னகையுடன் இருந்து யார் எது சொன்னாலும் மக்கள் நலன் மட்டும் முக்கியம் என்று செயல்புரிந்து வருகிறார். தமிழக வரலாற்றில் சட்டமன்றத்தில் 21 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும், 15 ஆண்டுகளாக முதல்வராகவும் இருந்த அம்மாவின் படம் திறக்கப்பட்டது சட்டமன்ற வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.
3 நாட்கள் கலெக்டர், காவல்துறை மாநாட்டை நடத்தி மக்கள் நலன் காத்திட திட்டங்களை முன்வைத்திட கோரினார். அதன் அடிப்படையில் குடிநீர், சாலை, மக்கள் பயன் திட்டங்கள் என 82 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்து உள்ளார். மேலும், அவர் மத்திய மந்திரி நிதின்கட்கோரி மூலம் தமிழகத்திற்கு 43 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை பெற்றுள்ளார். எங்களுக்கு கலர்கலராக சட்டை போட தெரியாது, மக்களுக்காக உழைக்க மட்டுமே தெரியும். இவ்வாறு பேசினார்.