கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், நேற்று இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உயர்ந்தது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் வெள்ளை அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 405 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் 71வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொண்டாடும் வகையில் மலர் தூவி அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்த்துள்ளனர்.