விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது பிரம்மாண்டமான ராஜா தேசிங்கு கோட்டை. ராஜா தேசிங்கு என்ற மன்னன் இந்தக் கோட்டையில் தங்கியிருந்து இப்பகுதியை ஆட்சி செய்துவந்தார். தற்போது இந்தக் கோட்டை தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதுவும் பண்டிகை, விடுமுறை காலங்களில் கோட்டையைக் காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.
செஞ்சி நகருக்கு அருகில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மூலம் இந்த நகரில் வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி என இரண்டு கோட்டைகள் சுமார் 15 கிலோ மீட்டருக்கு கற்களால் ஆன மதில் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மதில் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் கோட்டைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுலா பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர். செஞ்சி கோட்டைப் பகுதியில், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதனை தொல்பொருள் துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்; மீண்டும் மதில் சுவர் அமைக்க வேண்டும்; மேலும், செஞ்சி கோட்டையையும் அதனைச் சுற்றியுள்ள மதில்களையும் ஆய்வுசெய்து, அதைப் பாதுகாக்கும் பணியில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.