வீடுகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என எல்லா இடங்களிலும் ஆர்.ஓ. வாட்டர் அல்லது மினரல் வாட்டர் எனப்படும் கேன் குடிநீர்கள் ஏகபோக பயன்பாட்டில் உள்ளது. கடந்த பத்து, இருபது வருடங்களாக மக்களும் இதை குடித்து பழகி விட்டனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட பொதுநல வழக்கில் உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி அதை சுத்திகரித்து விலைக்கு விற்பதை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு பேரிடியாக அமைந்தது. இந்நிலையில் பத்து லிட்டர் இருபது அதற்கு மேலும் கேன்களில் குடிநீர் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள், வினியோக டீலர்கள், அதன் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்துக்குப்பின், இதன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழ்நாட்டில் மினரல் வாட்டர் ஆயிரத்து நானூறு நிறுவனங்கள் தயாரிக்கிறது. ஈரோட்டில் மட்டும் முப்பத்தி மூன்று நிறுவனங்கள் உள்ளன. இங்கு மட்டும் நான்காயிரம் டீலர்கள், பத்தாயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.
சென்ற 2017ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அப்போதுதான் அதில், நிலத்தடி நீரை பயன்படுத்த அரசு அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பல நிறுவனங்கள் நீண்ட வருடங்களாக இந்த அரசாணைக்கு முன்பே துவங்கப்பட்டு, மக்களின் அன்றாட குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.
பொதுவாக ஈரோட்டில் மட்டும் எடுத்துக் கொண்டால் காவிரி ஆற்றில், காளிங்கராயன் வாய்க்காலில் பெருமளவு சாயக்கழிவு உட்பட பல கெமிக்கல் கழிவுகள் கலந்து அந்த தண்ணீரை அப்படியே மக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த சூழலில் இங்கு மழைக்காலங்களில் தினமும் அறுபதாயிரம் தலா இருபது லிட்டர் கேன்களும் கோடை காலத்தில், ஒரு லட்சம் கேனும் மக்களிடம் விற்பனை செய்கிறோம்.
சென்ற 20ந் தேதிக்கு மேல் தமிழகத்தில் பல யூனிட் மினரல் வாட்டர் உற்பத்தி நிறுவனங்களை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு விட்டதால் உற்பத்தி செய்ய முடியாமல் வினியோகம் நிறுத்தப்பட்டு விட்டது. நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாய்ததை கோரிக்கையாக முன்வைத்துள்ளோம். இது பற்றி தமிழக முதல்வரிடமும் பேச இருக்கிறோம்.
நாங்கள் அரசிடம் முறையாக அனுமதி பெற்று தண்ணீர் எடுத்தாலும் ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் தண்ணீர் எடுக்க மட்டுமே அனுமதி உள்ளது. அதில், 50 சதவீதம் குடிநீராகவும், 50 சதவீதம் வேஸ்ட்டாக வீணாகி, அதனை மறுசுழற்சிக்கும், பிற பயன்பாட்டுக்கும் வழங்குகிறோம். இந்த குறைந்த அளவை வைத்து எந்த குடிநீர் ஆலைகளையும் செயல்படுத்த முடியாது.
ஒரு ஆலை செயல்பட வேண்டும் என்றால் அதில் 55 வகையான பரிசோதனைகளும் 15க்கும் மேற்பட்ட அனுமதி யையும் பெற்றுள்ளோம். இதில் நிலத்தடி நீர் அனுமதியையும் நாங்கள் பெறுவதற்கு தான் விரும்புகிறோம். எங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் வசூலிக்கும் வகையில் சென்ற 2017 க்கு முன்பு துவங்கிய தொழிற்சாலைகளுக்கு இந்த விதிகளை தளர்த்தி எங்களுக்கு அனுமதி தர வேண்டும்.
தமிழ்நாடு முழுக்க பல லட்சம் பேரின் வாழ்வாதாரம், மட்டுமல்ல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் தடைபடும். மேலும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு போலியான குடிநீர் நிறுவனங்கள், மினரல் வாட்டர் நிறுவனங்கள், முறைப்படி சுத்திகரிக்காத நீரை வழங்கும் நிலைதான் ஏற்படும். மாநகராட்சி மூலம், குறைந்த தொகையில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு வெறும் ஒரிரு பரிசோதனை மட்டுமே செய்கிறார்கள் ஆனால் நாங்கள் அப்படியல்ல முறைப்படி நீரை சுத்திகரிக்கிறோம் என்றார்.
நீதிமன்ற உத்தரவு அதனால் மினரல் வாட்டர் கம்பெனிகள் நெருக்கடி என்பது ஒரு புறம் இருந்தாலும் இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அவர்களின் வணிகத்திற்கு வாய்ப்பு அளிப்பதாக அமைந்துவிடுகிறது எனக் கூறிய உற்பத்தியாளர் ஒருவர், சிறிய நிறுவனங்களை கபளீகரம் செய்து பெரும் முதலாளிகளை கொண்ட கார்ப்பரேட் கம்பெனி ஒட்டுமொத்த குத்தகையாக இந்த குடிநீர் உரிமை பெறுவதற்காக இப்படி எல்லாம் நடக்கிறதோ என நாங்கள் அஞ்சுகிறோம் என்றார்.
பெட்டிக்கடைகளை ஒழித்து சூப்பர் ஸ்டோர் அல்லது டிபாட்மென்ட் ஸ்டோர்கள் வந்தன பிறகு இதையும் நசுக்கி இப்போது நகரங்களில் மால் வந்து விட்டது. அப்படித்தான் குடிநீர் உரிமையும் செல்லப் போகிறது. குடிநீரையும் பெரு முதலாளியே எடுத்துக் கொண்டால் மிஞ்சி இருப்பது நாம் சுவாசிக்கும் காற்று தான் அதற்கும் நம் ஆட்சியாளர்கள் ப்ளான் போட்டு வைத்திருப்பார்கள் தான்.