Skip to main content

நீர் நிலைகள் சீர் அமைக்கும் பணி; துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு! 

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Water body maintenance  Inaugurated Minister KN Nehru!

 

திருச்சி மாவட்டம், நீர்வளத் துறையின் சார்பில் ஆற்று பாதுகாப்புக் கோட்டம் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் என ரூபாய் 18.75 கோடி மதிப்பில் 232.59 கிமீ துரத்திற்கு 90 பணிகளை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று துவங்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டியாற்றில் (உய்யகொண்டான் பாலம்) தூர்வாரும் பணியினை கொடியசைத்துத் தொடங்கி வைக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் இரட்டை மலைப்பாதை கோரையாற்றில் தூர்வாரும் பணியையும் துவங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணையின்படி திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் என மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4964.11கிமீ தூரத்திற்கு 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 810 இயங்திரங்களை கொண்டு அனைத்து பணிகளையும் வருகின்ற ஜுன் 10ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 
இந்த தூர்வாரும் பணிகள் முழுவதும் நிறைவடைந்த உடன் மேட்டூரிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைகிறதா என்பது உறுதி செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தின் நோக்கமே கடந்த ஆண்டுகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை வருங்காலங்களில் தவிர்க்கவும் வடிகால்களை சீரிய முறையில் தூர்வாரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

அடுத்த சில வாரங்களில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் கால்வாயில் இருந்து அல்லித்துறை வரை உள்ள போக்குவரத்து நெரிசல்களை சரிசெய்ய புதிய பாலங்கள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திருச்சிக்கு வருகை தந்து பார்வையிட உள்ளார்கள். அதன்பிறகு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். அதேபோல் காவிரியின் குறுக்கே ரூ.130 கோடி புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள காவிரி பாலத்தை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் நடைபெற உள்ளது.

 

கால்வாய்களிலும், ஆறுகளிலும் கழிவுநீா்கள் கலப்பதை தடுக்க கழிவுநீர்களை மறுசுழற்சி செய்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. அதற்கான பணிகள் இன்னும் 1 ஆண்டுக்குள் முடிவடையும் என்று தெரிவித்தார். திருச்சி நகரப்பகுதிக்குள் நுழைந்து செல்லும் உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி போன்ற ஆறுகளில் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே செல்ல முடியும் அதற்கு அதிகமாக சென்றால் கரை உடைந்துவிடும் என்று அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை சரிசெய்வதற்கான பணிகளை தான் தற்போது செயல்படுத்த உள்ளோம்.

 

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் திருச்சி மாவட்டத்தில் அரியாறு, கோரையாறு, நந்தியாறு மற்றும் குடமுருட்டி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டு திருச்சி மாநகரின் புறநகர் மற்றும் மாநகருக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தார்கள். இப்பகுதிகளை தூர்வார இந்த திட்டத்தின்கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தூர்வாரும் பணிகள் சீரிய முறையில் நடைபெற தமிழ்நாடு அரசின் மூலம் 10 மாவட்டங்களுக்கும் குடிமை பணி அலுவலர்கள் பணிகளை கண்காணிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 

நீர்வளத்துறை மூலம் பணிகளை விரைவாக முடிக்கவும், நல்ல முறையில் மேற்கொள்ளவும் கூடுதலாக பொறியாளர்கள் தேவைக்கேற்ப இத்துறையில் பிற பிரிவுகளில் இருந்து பணியமர்த்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உழவர் குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்