டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளை தடுக்க
போர்க்கால நடவடிக்கை எடுத்திடுக CPIM வலியுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என தெரியவருகிறது.
பத்து நாட்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்த தமிழக அரசு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் டெங்கு வைரஸை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பான நடவடிக்கைகளை எடுக்காததும், அதற்கான ஊழியர்களையும், தேவையான நிதி ஒதுக்கீட்டையும் செய்யாததன் காரணமாகவே இன்று டெங்கு காய்ச்சலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புக்கும், ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசே முழுப்பொறுப்பாகும். தமிழக அரசின் இத்தகைய பொறுப்பற்ற செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் கருவி ஒரு சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள், மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதிகள் கூட பல மருத்துவனைகளில் இல்லை. நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களினாலேயே பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு ஆண்டுக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தான் உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை ஓரளவு சரியான முறையில் எடுத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் தமிழக அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது.
ஆனால் தற்போது குடியிருப்பு பகுதிகளில் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொதுச்சுகாதார சட்டப்பிரிவுகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்களை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியதாகும்.
எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையம் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டுமெனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழகமெங்கும் துரித வேகத்தில் நடவடிக்கை எடுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- ஜி. ராமகிருஷ்ணன்