கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், முன்னூர் கிராமம், காட்டுமுன்னூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். அவரது தாயார் கீதா (முன்னூர் பஞ்சாயத்து 7வது வார்டு உறுப்பினர்), தகப்பனார் முருகேசன் ஆகிய மூவரும் வார்டு உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு காட்டுமுன்னூரில் அவர்களுக்கு சொந்தமான 2 1/2 செண்ட் நிலத்தை மீறி பஞ்சாயத்து பொது வீதியை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பை அதிகப்படுத்தி பஞ்சாயத்து பொது சாக்கடை பாதையை அடைத்து, அவர்களது வீட்டிற்கு சாய்வான படிக்கட்டு அமைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தங்கவேல் - மலர்விழி தம்பதியினர் முன்னூர் பஞ்சாயத்து தலைவரிடம் வாய்மொழியாகவும் க.பரமத்தி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் செய்துள்ளனர். மேற்படி இரண்டு நிர்வாகமும் உரிய ஆவணங்களைக் கொடுத்த பின்னர் கட்டுமான பணிகளை செய்யுமாறு கூறியுள்ளனர். இதை மீறி, கடந்த 16.08.2021 அன்று மதியம் சுமார் 1.30மணியளவில் மேற்படி பிரசாந்த், கீதா, முருகேசன், கொத்தனார் கோபி ஆகியோர் நான்கு நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்றுகூடி பஞ்சாயத்து வீதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணிகளை செய்துள்ளனர்.
இதைத் தடுத்த தங்கவேல் - மலர்விழி தம்பதியினரை 8 பேர் சேர்ந்து ஆயுதங்களை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பிரசாந்த் கஞ்சா போதையில் தங்கவேலை கொலை செய்யும் நோக்கில் மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தங்கவேல் என்பவருக்குத் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது சம்பந்தமாக க.பரமத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இதைத் தொடர்ந்து பிரசாந்த், கீதா, முருகேசன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாக உள்ளனர்.
மேலும், க.பரமத்தி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கு புலன்விசாரணையை வேறு அதிகாரிக்கு மாற்றி அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து பிரசாந்த், கீதா, முருகேசன் ஆகிய மூவரையும் தேடிவருகின்றனர்.