சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் 8வது தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ள எட்டு அடி உயரம் கொண்ட மதில் சுவர் அதிகாலையில் 25 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மின்சார பெட்டிகள், குப்பை சேகரிப்பு தொட்டிகள் சேதமாகியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏற்கனவே இதே பள்ளியின் வேறொரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்ற காரணத்தினால் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லை. பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.