டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் மக்கள் பல்வேறு சேதங்களை சந்தித்து வருகின்றனர். குடியிருப்புகளின் இடிபாடுகள், குடியிருப்புக்குள் மழை நீர், வயல் வெளியில் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாவது என ஒரு புறமும், இடிபாடுகளில் சிக்கி மனித உயிர்கள் பலியாவதும், கால்நடைகள் பலியாவதும் நடந்து வருகின்றது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை துவங்கி, தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட சற்று அதிக அளவில் கொட்டித்தீர்த்து வருகிறது. மன்னார்குடி பகுதியிலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாக சுவர் இடிந்து மன்னார்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி சரசு என்பவர் உயிரிழந்தார். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுவர் இடிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
"ஆண்டு தவறாமல் மழையும், புயலும், வெள்ளமும் வருவதும், ஏழைகளின் குடிசைகளை பதம்பார்த்துவிட்டு போவதும் வாடிக்கையாகிவிட்டது. சேதமான குடிசையை சீரமைக்க வட்டிக்கு கடன்வாங்கி குடிசையை சீரமைப்பதற்குள் அடுத்த மழை வந்துவிடும். அதற்கு மீண்டும் கடனை வாங்கும் நிலையாகிடும். போதிய வேலையில்லாத சூழலில் இப்படி கடன்வாங்கி வாங்கி வாழ்விழந்து தவிக்கிற நிலையே தினக்கூலி ஆட்களின் தலைவிதியாகிவிட்டது. கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை உருவாக்கி குடிசையில்லாத நாடாக மாற்ற உத்தரவிட்டார். அவரது ஆட்சிகாலம் முடியும்வரை பல குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறியது. பிறகு வந்த அதிமுக ஆட்சியில் அந்த திட்டத்தில் பல குளறுபடிகள் துவங்கி பாழாகிவிட்டது. அதே போல மோடி வீடு திட்டத்தில் அதிக ஊழல் நடந்ததும், அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதும் மன்னார்குடி தொகுதியில் தான் அதிகம்" என்கிறார் சமுக ஆர்வலரான சிவசந்திரன்.