ஊழியர்களிடம் மாதாமாதம் பிடித்தம் செய்த தொகையைப் போக்குவரத்து கழக பணியாளர் கடன் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்க வலியுறுத்தி கூட்டுறவு சங்க இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பல்லவன் இல்லம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் மாதம்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஏழு நாட்களுக்குள் கூட்டுறுவு சங்கத்திடம் செலத்த வேண்டும் என்பது விதி. ஆனால் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.54 கோடியை கூட்டுறவு சங்கத்திடம் செலுத்தவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “மாதாமாதம் கிட்டத்தட்ட ரூ.8 கோடியை மாநகரப் போக்குவரத்து கழகம், விழுப்புரம் மற்றும் எஸ்.இ.டி.சி போன்றவை தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்கின்றது. இதனை கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் இதுதான் விதியும்கூட. ஆனால் கடந்த ஓராண்டாக எந்தத் தொகையும் கூட்டுறவு சங்கத்திடம் இந்தக் கழகங்கள் செலுத்தவில்லை. இது தொடர்பாக நாங்கள் முதலவர் தனிப்பிரிவு, போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு என தனித்தனியே கடித்தம் எழுதியுள்ளோம் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகவே குறைந்தது தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.50 கோடியை கொடுத்தால் தான் இந்தப் போராட்டத்தை நிறுத்துவோம். அப்படியில்லை என்றால் போராட்டம் தொடரும்” என்றார்கள்.