விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிட்டு என்பவரது மகன் தண்டபாணி(45). இவருக்குச் சொந்தமான குடிசை வீடு இருவேல்பட்டு ஊரில் இருந்துள்ளது. இவர் பிழைப்புக்காக சென்னையில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து பிழைத்து வந்துள்ளார். கரோனா நோய்ப் பரவல் காரணமாக சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் சொந்த ஊரில் வந்து தனது குடிசையில் தங்கி அப்பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து இவரை தேடிவந்த அதிகாரிகள் “உங்களது குடிசை வீட்டை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளோம், தாங்கள் கூரை வீட்டை இடித்துவிட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர். அதிகாரிகளின் பேச்சை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி, இருந்த கூரை வீட்டையும் விட்டு விட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார் தண்டபாணி.
மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகட்டும் திட்டத்தில் தரவேண்டிய பணத்தையும் அதற்கான அனுமதியையும் கேட்டு நடையாய் நடந்தார். திருவெண்ணைநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தண்டபாணி சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தண்டபாணியிடம், ஏற்கனவே உங்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதற்கான அரசு உதவிப் பணமும் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தண்டபாணி “எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவில்லை எனது வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பவில்லை, அதற்காக நான் எந்த டாகுமென்ட்களிலும் கையெழுத்துப் போடவில்லை. அப்படியிருக்கும்போது எனது வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறீர்களே, இது என்ன விந்தை" என்று விளக்கம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு தடுமாறிய அந்த அலுவலக அதிகாரிகள் இல்லை இல்லை, உங்கள் வீடு கட்டுவதற்கான உத்தரவை ஒரு வாரம் பின்னர் வந்து வாங்கிச் செல்லுங்கள் வீடு கட்டும் பணியைத் தொடங்குங்கள், வீடு கட்டுவதற்காக அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை அடுத்தடுத்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறோம் என்று சமாதானம் கூறி அனுப்பியுள்ளனர்.
இதை நம்பி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி வீட்டுப் பணியைத் தொடர்ந்து செய்து வந்த தண்டபாணி மீண்டும் அதிகாரிகளைத் தேடி திருவெண்ணைநல்லூர் அலுவலகம் சென்றார். வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும், வீடு கட்டும் பணிக்கான பணத்தையும் கேட்டுள்ளார். இப்படி ஒரு முறை அல்ல, பல முறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும், அதிகாரிகள் தண்டபாணிக்கு வீடு கட்டும் பணி உத்தரவும் வழங்கவில்லை, அதற்கான நிதியும் வழங்கவில்லை. இதனால் நொந்துபோன தண்டபாணி அதிகாரிகளின் பேச்சை நம்பி, இருந்த குடிசை வீட்டையும் இடித்துவிட்டு வட்டிக்குக் கடன் வாங்கி தொடர்ந்த வீடுகட்டும் பணியும் அரைகுறையாக நிற்கிறது.
வட்டி கட்ட முடியவில்லை. அதிகாரிகளோ என் வீடு ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எனவே, எனது வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தண்டபாணி புகார் அளித்துள்ளார். போலீஸார் அவரது புகாரை ஏற்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாத வீட்டை கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என் பெயருக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை. பணமும் அனுப்பவில்லை. அப்படியானால், என் பெயரில் யாருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள். அதற்கான பணத்தை யாரிடமும் கொடுத்தார்களா அல்லது வீட்டைக் கட்டாமலேயே கட்டியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டிக் கொண்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் தண்டபாணி.