கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இன்றி தவித்துவருகிறார்கள். அதிலும் பெரும்பாலும் தினக் கூலியை மட்டுமே நம்பியிருப்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகிறார்கள். அந்த வகையில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் சிறிய அளவில் நடமாடும் சர்க்கஸ் வித்தைகள் காட்டியும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியும் மக்களை மகிழ்வித்து வருமானம் ஈட்டிவரும் நாடோடி இனமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துவருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நடமாடும் சர்க்கஸ் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் சர்க்கஸ் வித்தைகளைக் காட்டி மக்களிடம் உதவி கேட்டுவந்தனர். அவர்களின் நிலையை அறிந்த ‘நாட்டார்மங்கலம் நண்பர்கள் குழு’வினர், அந்தக் குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், கரோனா தொற்றிலிருந்து தற்காக்கும் முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினார்கள். அதனைப் பெற்றக்கொண்ட அந்த சர்க்கஸ் வித்தை காட்டும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.