விருதுநகர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
“அதிமுகவில் மீண்டும் இணைவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் இன்பத்தமிழன்.. திரும்பத்திரும்ப இது நடக்கிறது.” என்று சிரித்தார் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர்.
இன்பத்தமிழனுக்கும் கட்சி தாவலுக்கும் உள்ள ஃப்ளாஷ்பேக்கை ரீவைண்ட் செய்து பார்ப்போம்!
சட்ட மன்றத்தில் அதிரடி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த தாமரைக்கனியின் மோதிரக்கை அப்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரைக்கனி, பிற்காலத்தில் அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்பட்டு, 2001-ல் மகன் இன்பத்தமிழனை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்க வேண்டிய நிலைக்கு ஆளானார். அப்போது தாமரைக்கனியை வெறுப்பேற்றுவதற்காகவே, இன்பத்தமிழனை விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், அமைச்சராகவும் ஆக்கினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்திமக்காலத்தில், மகன் இன்பத்தமிழன் நடத்திய அரசியல் பழிவாங்கலில் உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டு இறந்துபோனார் தாமரைக்கனி.
தந்தை தாமரைக்கனி அனுபவித்த அதே அரசியல் அவமரியாதையை, 2006 சட்டமன்ற தேர்தலில் இன்பத்தமிழனும் சந்திக்க நேரிட்டது. தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா சீட் தராததால், திமுகவுக்குத் தாவினார் இன்பத்தமிழன். அதன்பிறகு, திமுகவும் ஒரம் கட்டிவிட, ஜெயலலிதாவைச் சந்தித்து மீண்டும் அதிமுக பக்கம் வந்தார். “நான் செய்த தவறுகளை மன்னித்து தாயுள்ளத்தோடு என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார்.” என்றார்.
அதிமுகவில் இழந்த மரியாதை இழந்ததாகவே இருந்துவிட, டிடிவி தினகரன் ஆதரவு நிலை எடுத்து, அமமுக பக்கம் சென்றார். அக்கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் ஆனார். பொறுப்பு கிடைத்த வேகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை வார்த்தைகளால் காய்ச்சி எடுத்தார்.
“ஜெயலலிதா சிறையில் இருந்தபோது ஓ.பி.எஸ்.ஐ சசிகலாவிடம் அறிமுகப்படுத்தி அவரை முதலமைச்சர் ஆக்கியதே தினகரன்தான்..” என்று தன்னுடைய தலைமைக்குத் திடீர் விசுவாசம் காட்டினார். “தமிழகத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள ஓ.பி.எஸ். வீட்டில் ஏன் ரெய்டு நடத்தவில்லை? ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமல்ல, தேனி, பெரியகுளம், குமுளி போன்ற இடங்களில் ஏராளமான ஏக்கர் நிலங்களை ஓ.பி.எஸ். குடும்பத்தினர் வாங்கிக் குவித்திருக்கிறார்கள். நடிகர் சத்யராஜ் சினிமாவில் அமாவாசையாக நடித்தார். நிஜத்தில் அரசியலில் அமாவாசையாக வாழ்ந்து வருகிறார் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமிக்கு சேலத்தில் ஏராளமாக பேருந்துகள் உள்ளன. மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியில் எடப்பாடிக்கு தொடர்பு இருந்தது. முதலமைச்சர் ஆனதும், அதைச் சரி செய்துவிட்டார்.” என்றெல்லாம் விளாசினார்.
கட்சித் தலைமையை வாய்க்கு வந்தபடி திட்டுவதும், பிறகு சகலத்தையும் மறந்து அத்தலைமையிடம் போய் நிற்பதும், தலைமையும் பெருந்தன்மையோடு திட்டியவரை ஆரத்தழுவுவதும் அரசியலில் சகஜம்தானே!
‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்..’ அமமுகவையும் தினகரனையும் விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் விலகிச்செல்லும் இந்த சீசனில், பறந்து போனவர்களில் ஒருவராக இருக்கிறார் இன்பத்தமிழன்!