விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் வியாபாரியான சிவா, தனது மனைவி மல்லிகாவின் வீடான கோவில்பட்டி மந்தித் தோப்பு காலனியில் அவருடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி கோவில்பட்டிக்கு பைக்கில் வந்த சிவாவை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துத் தாக்கி காரில் கடத்திக் கொண்டு குற்றாலம் லாட்ஜில் வைத்து அடைத்தது. அத்துடன் சிவாவின் மனைவி மல்லிகாவைத் தொடர்பு கொண்டு 6 லட்சம் கொடுத்தால் உன் கணவனை விடுவிப்போம். இல்லை என்றால் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிவிடுவோம் என்று கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.
இதையடுத்து, மல்லிகா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, எஸ்.பி. ஜெயக்குமாரின் உத்தரவுபடி டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் விஜித்ஆனந்த், சபாபதி உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்களின் ஆலோசனைப்படி, மல்லிகா 6 லட்சம் பணம் தயார் செய்து பணத்துடன் கயத்தாறு ஓட்டல் அருகே சூட்கேசுடன் நிற்பதாகவும், அங்கு வந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு கணவரை விடுவிக்குமாறு செல்போனில் கடத்தல் கும்பலிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தக் கும்பல் நேற்று (18/12/2021) மாலை 2 கார்களில் சிவாவுடன் கயத்தாறு வந்தனர்.
அங்கு நின்றிருந்த மல்லிகா காரிலிருந்த ஒருவரிடம் சூட்கேசைக் கொடுக்க, மறைந்திருந்த போலீசார் இரண்டு கார்களையும் வளைத்தனர். ஆனால் கார்கள் நொடியில் வேகமெடுத்து தப்பின. ஆனாலும், அவர்களை 20 கி.மீ. தொலைவு துரத்திய காவல்துறையினர் பெத்தேல் என்ற இடத்தில் மடக்கி கும்பலைச் சுற்றி வளைத்து கைது செய்து கடத்தப்பட்டிருந்த சிவாவை மீட்டனர்.
விசாரணையில் அவர்கள், மணிகண்டன், ரமேஷ், கருத்தப்பாண்டி, ஏமராஜ், அகஸ்டின்ராஜ் என்றும் மந்தித் தோப்பு, நாலாட்டின்புதூர் இலுப்பையூரணிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கைதான 5 பேரையும் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.