சிவகாசி அருகிலுள்ள சுக்கிரவார்பட்டியில், ஸ்ரீபதி பேப்பர் & போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், ஐந்துக்கும் மேற்பட்ட இயந்திரங்களுடன், காகித அட்டை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. பழைய காகிதங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கி தரம் பிரித்துப் புதுப்பிப்பதே இந்த ஆலையின் பிரதான பணியாகும். இங்கு தயாரிக்கப்படும் காகித அட்டைகள் ஏற்றுமதி தரத்திலானவை.
இன்று (31/01/2020) திருத்தங்கல் மற்றும் சுக்கிரவார்பட்டி பகுதிகளில், அறிவிக்கப்பட்ட மின் தடை பகல் முழுவதும் இருந்தது. மாலையில் மின் சப்ளை கிடைத்ததும், ஆலையில் ட்ரிப் மாற்றிவிடும்போது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகப்பெரிய அந்த அட்டை மில்லின் யூனிட் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அந்தப் பகுதியே புகைமண்டலமானது.
விபத்து நடந்தபோது பணியில் இருந்த 300- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எச்சரிக்கையுடன் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், பல கோடி ரூபாய் பெறுமான பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டதாகச் சொல்கின்றனர். மின் கசிவால் பற்றிய தீயை, ஆலை ஊழியர்கள் உடனே அணைத்திருக்க முடியும் என்றும் போதிய தண்ணீர் இருப்பு இல்லாத நிலையில், மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி அணைப்பதற்குள் மளமளவென்று தீ பரவி விட்டதாகவும், அந்த ஆலை வட்டாரத்தில் பேசிக்கொண்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இந்த ஆலை, 2016-ல் குறைந்த விபத்து நிகழ்வு விகிதம் என்ற அடிப்படையில், தொழிற்சாலைகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகளில் முதல் பரிசு பெற்ற ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.