‘விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான என் அண்ணன் கா.ரவிச்சந்திரனும், கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான என் அண்ணி வள்ளியும், சாகும் தருவாயிலுள்ள என்னை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். மோசடி செய்த இவ்விருவரிடம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்கச் செய்யுங்கள்.’ என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ள தன்னுடைய உடன்பிறப்பான நல்லதம்பி குறித்து அவருடைய அண்ணன் ரவிச்சந்திரன் “காளிமுத்தண்ணன் பேரை நல்லதம்பி களங்கப்படுத்திட்டு இருக்காரு.
அவரு பண்ணுன தவறுகளுக்கு எல்லாம் வேற யாரையாவது பழி சொல்லணும்னு பார்ப்பாரு. இதுக்கு முன்னால, இப்படித்தான் ராஜேந்திரபாலாஜி மேல பழிபோட்டாரு. இப்ப என்மேல பழிபோடறாரு. நல்லதம்பி படிச்ச படிப்பு, அறிவு எல்லாத்தையும் மோசடிக்கு மட்டுமே பயன்படுத்திட்டு இருக்காரு. தமிழ்நாடு பூராவும் நல்லதம்பி மேல ஆயிரக்கணக்குல கேஸ் இருக்கு..” எனக் கூறிய விவகாரம் குறித்து, கடந்த ஏப்ரல் 24- ஆம் தேதி ‘அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலைக்கு விலை! தோண்டத் தோண்ட கிளம்பும் மோசடிகள்!’ என்னும் தலைப்பில் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், நமது லைனுக்கு வந்த முன்னாள் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயநல்லதம்பி “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கான எனது மறுப்பையும் வெளியிடவேண்டும்..” எனக் கேட்டுக்கொண்டார்.
நல்லதம்பியின் விளக்கம் இதோ, “அரசியல்ல இருந்தா யாராவது ரெண்டுபேர் புகார் கொடுக்கத்தான் செய்வாங்க. அதுல உண்மை இருந்தா கேஸ் ரிஜிஸ்டர் பண்ணுவாங்க. அரசு வேலைக்குப் பணம் வாங்கிக்கொடுத்த நாங்க மோசமானவங்க, வாங்கிச் சாப்பிட்ட மந்திரி, மாவட்ட செயலாளர் எல்லாரும் நல்லவங்கன்னு அதிமுக தலைமை முடிவு பண்ணி, என்னை கட்சிய விட்டு எடுத்துட்டாங்க. சாத்தூருக்கு என்னை பொறுப்பாளரா போடும்போது காளிமுத்தண்ணன் லெட்டர் பேடை எடுத்து ஏமாத்துனவன்னு எங்க அண்ணன் ரவிச்சந்திரனுக்குத் தெரியாதா? நான் திருந்திட்டேன்னு சொன்னத நம்பித்தான் எனக்கு பொறுப்பு கொடுத்தாங்கன்னா, நான் போலீஸ் ஸ்டேஷன்ல திருந்திட்டேன்னு எழுதிக் கொடுத்தேனா? இல்லைன்னா நன்னடத்தை சான்றிதழ் வாங்கிட்டு வந்தேனா? அரசு வேலைக்கு மத்தவங்ககிட்ட பணம் வாங்கிக் கொடுக்குறது மட்டும்தான் எனக்கு பொழப்புன்னு கிடையாது.
TNSET எக்ஸாம்ல, துணைவேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, எங்க அண்ணி வள்ளி எத்தனையோ பேரை பாஸ் பண்ண வச்சாங்க. எங்க அண்ணனும் (ரவிச்சந்திரன்) அண்ணியும் (வள்ளி) உதவி பண்ணுவாங்கன்னு நம்பி என்கிட்ட வர்றவங்கள கூட்டிட்டு போனேன். நான் அறிமுகப்படுத்தி வச்சேன். பணத்த அவங்ககிட்டயே கொடுங்கன்னு சொன்னேன். நான் பணத்த கையில வாங்கல. எனக்கும் எங்க அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை இல்லைன்னு சொல்லுறது பொய். அண்ணன், தம்பி உறவு எந்த இடத்துலயும் விட்டுப்போகாது. அறிமுகப்படுத்தி வச்ச பாவத்துக்கு, ஏமாந்தவங்க என்னை நெருக்கடி பண்ணும்போது, எங்க அண்ணன்கிட்ட அவங்க கொடுத்த பணத்தைக் கேட்டேன். எலக்ஷன் நேரத்துல செட்டில் பண்ணிடறேன்னு சொன்னாரு. ஒரு கோடி ரூபாய் செட்டில் பண்ண வேண்டியதுக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்தாரு.
நான் கொடுத்த புகார்ல, ஆதாரம் இல்லாமலா முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மேல போலீஸ் எப்.ஐ.ஆர். போட்டாங்க? புகார் கொடுத்த ரவீந்திரன் சுப்ரீம் கோர்ட்ல, நான் ராஜேந்திரபாலாஜிய பார்க்கல. நல்லதம்பிகிட்டதான் பணம் கொடுத்தேன்னு சொல்லுறாருன்னா, அவருக்கு பணம் செட்டில் ஆயிருச்சு. என்னை பலிகடா ஆக்கிட்டாங்க. எங்கே தொலைச்சோமோ, அங்கேதானே தேடமுடியும். அதான், எங்கண்ணன் ரவிச்சந்திரன், அண்ணி வள்ளி மேல, ஆதாரங்களோடு புகார் கொடுத்திருக்கேன்.
ராஜேந்திரபாலாஜி கேஸ்ல எங்க அண்ணன் ரவிச்சந்திரனை கூப்பிட்டு விசாரிச்சாங்க. அப்ப என்ன சொன்னாருன்னா, அவனுக்கும் (நல்லதம்பி) ராஜேந்திரபாலாஜிக்கும் ஆயிரத்தெட்டு கொடுக்கல் வாங்கல் இருந்துச்சு. அவன் கொடுத்தான், அவருதான் வாங்கினாரு. இதுல எனக்கு எந்த சம்பந்தமும் கிடையானுன்னாரு. இப்ப நான் கொடுத்த புகார்ல அவருக்கு (ரவிச்சந்திரன்) வலிச்சதும், ராஜேந்திரபாலாஜி மேல பழிபோட்ட மாதிரி, என்மேலயும் பழிபோடறான்னு சொல்லுறாரு. ஆனா, எல்லா பழியவும் என்மேல போடறாரு.” என்று நிறையப் பேசினார்.
ஆக, நல்லதம்பி சொல்ல வருவது இதுதான், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…