கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தில் குடிமராமத்துப் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளதாக மன்னம்பாடி விவசாயிகள் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அதில் மன்னம்பாடி பெரிய ஏரியில் குடிமராமத்துப் பணி நடைபெறுவதற்காக ஏரி பாசன விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது. அதில் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஒரு சங்கமும், ஆளுங்கட்சியைச் (அ.தி.மு.க) சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் தலைமையில் ஒரு சங்கமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரிய ஏரி குடிமராமத்துப் பணி நடைபெறுவதற்குப் பெரும்பான்மை விவசாயிகளைக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி சங்கத்துக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ள நிலையில் ஆளுங்கட்சியினரின் ஆதரவை மட்டும் கொண்ட நடேசன் சங்கத்தினர் அப்பணிகளை மேற்கொள்வதற்கு அ.தி.மு.க.-வை சேர்ந்த பொறுப்பாளர்கள் அதிகாரிகளை மிரட்டி அதன்படி அவருக்கு அந்த பணியை அளிப்பதற்கு முயற்சியை மேற்கொண்டனர்.
இதனால் இரு சங்கத்தினருக்கும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதற்கு தீர்வுகாண இரண்டு சங்கத்தினருக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலின்போது வாக்களிக்கும் விவசாயிகளிடம் தேர்தலை நடத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடேசன் சங்கத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையை முறையாகத் தெரிவிக்காமல் நடேசன் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு சட்டென்று அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார். எனவே ஆளும் கட்சியினருக்குச் சாதகமாகச் செயல்படும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் மன்னம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளை வைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் பிரவீன்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
மேலும் தேர்தல் முடிந்ததும் உடனடியாக சார் ஆட்சியரை விவசாயிகள் சந்திக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிமராமத்துப் பணிகளில் ஆளும்கட்சியினரின் தலையீடு உள்ளது என்றும், அதனால் முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறும் எனவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர்.