நாளை (10/09/2021) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா பரவல் காரணமாக, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
இந்நிலையில், "விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
தனிநபர்கள் தங்களின் சிலைகளைக் கோயில்களில் வைத்தால் அவற்றைக் கரைக்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.