விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள நல்முக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது 40). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் சக்கரபாணி கருத்து வேறுபாடுகள் காரணமாக வசந்தியை விட்டு பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வசந்திக்கும் அவரது உறவினரான 45 வயது செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்கள் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதில், வசந்தி கருவுற்றுள்ளார். கடந்த 21ஆம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வசந்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்று நாட்கள் கழித்து நேற்று முன்தினம் வசந்தி டிஸ்ஜார்ஜ் ஆகியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை குழந்தைக்கு தடுப்பு ஊசி போடுவதற்காக கிராம செவிலியர் ஒருவர் வசந்தி வீட்டிற்கு வந்துள்ளார்.
குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் குழந்தையை கொடுங்கள் என்று செவிலியர் கேட்டுள்ளார். அப்போது வசந்தி, குழந்தை இறந்து விட்டதாக தடுமாற்றத்துடன் பதில் கூறியுள்ளார். நல்ல நிலையில், ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்த குழந்தை எப்படி திடீரென இருந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த அந்த செவிலியர், கிராம நிர்வாக அலுவலருக்கும், பிரம்மதேசம் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அவரது தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், போலீசாரிடம் வசந்தி குழந்தை இறந்துவிட்டது. அதன் உடலை வட கொளப்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு கிணற்றில் வீசி விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர் கூறிய கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அந்தக் கிணற்றில் பெண் குழந்தையின் உடல் மிதந்துள்ளது. அதை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.