விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டுபோனது. அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். திருடுபோன வாகன உரிமையாளர்களின் புகார்கள் காவல் நிலையங்களில் குவியத் தொடங்கியது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள், தலைமைக் காவலர்கள் ஐயப்பன், வெற்றிவேல், கணேசன், செந்தில், கோபால், பூபால் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தத் தனிப்படையினர், நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்களை தடுத்துநிறுத்த முயன்றபோது, இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால், தனிப்படை காவலர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து காவல் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜசேகர் என்கிற ராஜேஷ் கண்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் லோகு என்கிற லோகநாதன் ஆகியோர் திண்டிவனத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் புரோக்கராகச் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது.
இருவரிடத்திலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திண்டிவனத்தில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கடந்த 2017 முதல் தற்போதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இவர்கள், இருசக்கர வாகனங்களைத் தனித்தனியாகப் பிரித்து 'சேஸ்' நம்பர்களை மாற்றி விற்பனை செய்துவந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து 2 பேரையும் கைதுசெய்த போலீசார், 18 இருசக்கர வாகனங்களை தற்போது அவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். டூவீலர் திருட்டில் கைதான ராஜேஷ் கண்ணன், மதுராந்தகம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தன் கைவரிசையைக் காட்டி வந்துள்ளார். மேலும், 2016ஆம் ஆண்டு பழைய வழக்குகளை முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் மீண்டும் டூவீலர் திருட்டை துவக்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.