
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் 5வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் தலை துண்டாகி இறந்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடல் அருகே கிடந்த ஆதார் அட்டை மூலம் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர்.
அவர்களது விசாரணையில் திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த சத்யராஜ் வயது 29 என்பது தெரியவந்தது. பி.காம் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சத்யராஜ் நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் மூலம் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும்போது விழுப்புரம் ரயில் நிலையம் தண்டவாளத்தில் தலை தனியாகவும் உடல் தனியாகவும் இறந்து கிடந்துள்ளார்.
விழுப்புரம் ஜங்ஷன் ரயில் தண்டவாள பகுதியில் சத்யராஜ் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது, ரயிலில் தற்செயலாக ஏற்பட்ட விபத்தா அல்லது வெறுப்பின் காரணமாக தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சம்பவம் விழுப்புரம் ஜங்சன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.