விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள ஈயங்குனம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலகிருஷ்ணன் (வயது 65). இவரது மூத்த மகன் சுப்பிரமணி (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். சுப்பிரமணி சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு அடிமையாகி குடித்து செலவு செய்து வந்துள்ளார்.
குடிப்பழக்கம் காரணமாக தந்தை பாலகிருஷ்ணன் மகனை அவ்வப்போது கண்டித்தும் வந்துள்ளார். இதனால் தினசரி மது போதையில் வீட்டுக்கு வரும் சுப்பிரமணி தந்தை பாலகிருஷ்ணனிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீப காலமாக சுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்று குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் தந்தை பாலகிருஷ்ணன் மீண்டும் மகனைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தந்தையிடம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் மது போதையில் இருந்த சுப்பிரமணி வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்து பாலகிருஷ்ணனை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பாலகிருஷ்ணன் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தந்தையை கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற சுப்பிரமணியை அக்கம்பக்கத்தினர் மடக்கிப் பிடித்து வளத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மது போதையில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.