தமிழகம் முழுவதும் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகள், புகார்கள், குறைகள் எனப் பலவற்றையும் மனுவாகக் கொடுத்துத் தீர்வு கண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடந்தது.
அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் கதவுக்குப் பின்னால் யாரோ ஒரு மர்ம நபர் ஓட்டிய நோட்டீஸில், “அலுவலகத்திற்கு வரும் ஏழை, எளிய, பாமர மக்களின் குறைகளைப் பூர்த்தி செய்யுங்கள்; ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி உதவி செய்யுங்கள். லஞ்சம் வாங்காமல் பணியை செய்யுங்கள்:” என்று குறிப்பிட்டு கடைசியாக இந்தியன் 2 என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறைத்தீர்க்கும் முகாமில் மனு அளித்தவர்களில் யாரோ ஒருவரின் கோரிக்கை நிறைவேறாததால்தான் இப்படி விரக்தியில் எழுதி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் மக்களிடம் லஞ்சம் கேட்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்தியன் தாத்தா தேடிச் சென்று பழி வாங்குவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் 'இந்தியன்' முதல் பாகத்தில், 'லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள்..' என்று கடிதம் இடம்பெற்றிருக்கும். தற்போது அதேபோன்று ஒரு கடிதத்தை யாரோ ஒரு மர்ம நபர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டிச்சென்றுளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.