கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் (செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கடைகளும் மூடப்படும் என சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் வாரத்தில் ஐந்து நாட்கள் கடைகள் மூடப்படும் என்றும், இனி இரண்டு நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் அறிவித்துள்ளார். மேலும் மருந்து, பால் தவிர மற்ற கடைகளை அனுமதிக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து பிற நாளில் திறந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், கடைகள் திறப்புக்கான புதிய கட்டுப்பாடு மே மாதம் 3-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்தார்.