“எங்க உயிர் போறதுக்குள்ள நடவடிக்கை எடுங்க..” என மதுக்கரை கிராமப்புற மக்கள் கண்ணீருடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியை சேர்த்தவர் வசந்த குமார். இவர், தனது தாய் லீலாவதி மற்றும் அவரது குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியன்று, லீலாவதி தன் பேரக்குழந்தைகளுடன் வீட்டுக்குள் இருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லீலாவதி குடும்பத்தினர், வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஒரு பெரிய பாறை அவர்கள் வசிக்கும் வீட்டின் மேல் விழுந்துள்ளது.
என்ன செய்வதென்று தெரியாமல், லீலாவதி பதறிக் கொண்டியிருந்த நேரத்தில், மேலும் ஒரு ராட்சதப் பாறை உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியது. இதனால், வீட்டின் ஒருபக்கம் பெரிதளவில் சேதமடைந்தது. இந்த கொடூர விபத்தில், வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார் மற்றும் மதுக்கரை வட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயகவுசல்யா ஆகியோர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, உயிர் பாதுகாப்பு கோரியும், வீட்டின் மீது விழும் பாறைகளை, அப்புறப்படுத்த வேண்டியும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர். இந்த சம்பவம் அரங்கேறி ஒருமாத காலம் ஆகியும், அப்பகுதியில் இருக்கும் வனத்துறை, வட்டாட்சியர், மற்றும் காவல்துறையினர் என எந்த அரசு அதிகாரிகளும், இதைப் பொருட்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.