திருவண்ணாமலையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெண்கள் விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் புனல்காடு கிராமத்தின் மலையடிவாரப் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து குப்பைகளை கொட்ட கிடங்கு ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு புனல்காடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களையும் அக்கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குப்பை கிடங்கிற்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்ற பொழுது அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது புனல்காடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி மற்றும் நிர்மலா ஆகிய இரண்டு பெண்கள் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகிலிருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்பொழுது உடனடியாக காவல்துறையினர் மற்றும் அங்கு இருந்து பொதுமக்கள் கிணற்றில் குதித்து துரிதமாக செயல்பட்டு கட்டில் மூலம் கயிறு கட்டி நிர்மலா மற்றும் குமாரி ஆகிய இரண்டு பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பேர் கிணற்றில் குதித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.