திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் பலமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்வதால் சாலைகளில் நீர் ஓடுகிறது. முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கால்வாய் தூர்வாராத அதிகாரிகளைக் கண்டித்து கச்சேரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பாக காமராஜபுரம் பொதுமக்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வீடுகளுக்குள் கழிவுநீர் வராதபடி கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரிசெய்து தரப்படும் என நகராட்சி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்குப்பின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.