Skip to main content

கிராம பஞ்சாயத்துகளின் தீர்மானப்படி டாஸ்மாக் கடையை அகற்றலாமே?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி! 

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

டாஸ்மாக் கடை வேண்டாமென்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதனைச் செயல்படுத்துவதற்கு ஏன் சட்டம் கொண்டுவரக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (21.01.2020) விசாரணைக்கு வந்தது .

village tasmac shop issues chennai high court


அப்போது நீதிபதிகள்,‘இந்தப் பிரச்சனை முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சனை. மாநில அரசானது ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும்.  ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.  அரசியலமைப்பு சட்டப்படி கிராம பஞ்சாயத்துகள் சமூக நலன் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏன் மாநில அரசு கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது? இதுதொடர்பாக ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது? இது ஒரு முக்கியமான பிரச்சனை. அரசின் கொள்கை முடிவுகளை காலதாமதம் செய்யக்கூடாது. நாங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே கருத்து தெரிவிக்கிறோம்.

இது தொடர்பாக, ஒரு ஆலோசனைக் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும். இது மிகவும் முக்கியமான பிரச்சினை. இது தமிழகத்திற்கு மட்டுமான பிரச்சனையல்ல. ஒட்டுமொத்த பிரச்சனை.’என்று நீதிபதிகள் தெரிவித்தபோது குறுக்கிட்ட பாமக தரப்பு வழக்கறிஞர் கே பாலு‘ஏற்கனவே தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கடைகளைக் குறைப்பதாகத் தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுகிறது.’என்று தெரிவித்தார்.  
 

தொடர்ந்து, இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அரசு முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்