விக்னேஷ் மரணம் தொடர்பாக மேலும் 4 நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த மாதம் 18ஆம் தேதி நள்ளிரவு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு விக்னேஷ் இறந்ததாக தெரிகிறது.விக்னேஷ் போலீசார் கஸ்டடியில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியாகி இருந்தது. அதன்படி, விக்னேஷின் உடலில் 13 இடங்களில் பலவிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தலையில் ஒரு அங்குலத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இடது கை, மூக்கின் வலதுபக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதுகு மற்றும் இடுப்பில் சிராய்ப்பு காயங்கள் உள்ளது. லத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிய ஆதாரங்களும் உடலில் காணப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார்.
நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக 12 காவலர்களிடம் சுமார் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின் காவல்நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தலைமை செயலாக தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் இதுவரை கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண வழக்கில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் ஏன் கொலை செய்யப்படும் அளவிற்கு போலீசாரால் தாக்கப்பட்டார் என்ற கேள்வி இருந்த நிலையில், விசாரணையில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் வைத்திருந்த மதுபாட்டிலை போலீசார் பிடுங்கிக்கொண்டதால் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் கொலை வரை சென்றிருக்கிறது என்று கூறப்படுகிறது.