நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. அதே வேளையில், அந்த பணத்திற்கும் நயினார் நாகேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அந்த பணத்தை கொண்டு சென்றவர்கள் பாஜகவினர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், நயினார் நாகேந்திரன், 'எனக்கும் அதற்கு சம்பந்தமில்லை' என கூறி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் போலீசார், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதிலும், எஃப் ஐ ஆர்-ல் சொல்லப்பட்ட பல முக்கிய தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதில், சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் பாலாமணி என்பவர் தேர்தல் பறக்கும் படையில் உள்ளார். அவரது டீம்மில் காவலர்கள் பிரபாகரன், குணசீலன், வீடியோ கிராபர் மோகன்ராஜ், டிரைவர் டில்லிபாபு ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று செந்தில் பாலாமணி தேர்தல் பறக்கும் படை டீம் தாம்பரம் செக்போஸ்ட் அருகே பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், செந்தில் பாலாமணியை போனில் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் ஏ கோச் படுக்கை எண்கள் 26,27,28 ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பணம் கொண்டுச் செல்வதாக தகவல் அளித்துள்ளார். தகவலின் படி, செந்தில் டீம் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்துள்ளனர்.
தகவலின் படி ரயிலில் பயணம் செய்த சதீஷ், பெருமாள், நவீன் என்ற மூவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அதிக அளவு பணம் இருந்தது தெரிய வந்தது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் தேர்தல் பறக்கும் படை கையும் களவுமாக அவர்களை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர். அதில், 3,98,91,500 ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து சிக்கிய சதீஷ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை, திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, தன்னிடம் கொடுத்து அனுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெருமாள் என்பவரிடம் விசாரணை செய்ததில் திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் ரயிலில் வந்ததும் தெரியவந்தது.
மேலும், இந்தப் பணம் அனைத்தையும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுத்ததாக சதீஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து பிஜேபியில் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ-வின் அடையாள அட்டையும் தேர்தல் பறக்கும் படையின கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, சிக்கியவர் கொடுத்த தகவலின் படி திருநெல்வேலி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு 22ஆம் தேதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர். இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு.. இன்றைய தினம் அவசர வழக்காக விசாரிப்பதாகக் கூறியுள்ளது.
இத்தகைய சூழலில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குறித்து வெளியான வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நயினார் நாகேந்திரனின் உறவினர் என சொல்லப்படும் முருகன் என்பவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது தான் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நயினார் நாகேந்திரனின் பிஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால் சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு பெருமாள் என்பவரை அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் குறிப்பிட்டுள்ள பெருமாள் என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான மூன்று பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக கூறியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.