இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலைக்குள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்களில் தொடர்ந்து மிக மிக பலத்த மழை பொழியும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 6 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. ராதாபுரத்தில் 19.1 சென்டிமீட்டர் மழையும், நாங்குநேரியில் 18.6 சென்டிமீட்டர் மழையும், நம்பியாறு அணை பகுதியில் 18.5 சென்டிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது.
களக்காட்டில் 16.2 சென்டிமீட்டர் மழையும். கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 15.4 சென்டிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது. மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் நாளை காலைக்குள் 50 சென்டிமீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக மிக பலத்த மழை பொழிந்து வருவதால் தென் மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.