வெண்மணி தியாகிகள் நினைவு சுடருக்கு
புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு
புதுக்கோட்டை ஆக.25- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி வெண்மணியிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகள் நினைவு சுடர் பயணத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29-ஆவது தமிழ்மாநில மாநாடு வருகின்ற ஆக.27, 28, 29 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு நாகை மாவட்டம் வெண்மணியிலிந்து தியாகிகள் நினைவாக நினைவு சுடர் எடுத்துவரப்படுகிறது. சங்கத்தின் மாநில செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் வரும் இப்பயணக் குழுவில் தஞ்சை மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன், நாகை மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், கடலூர் மாவட்டத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பீமராஜ், சிவகங்கையிலிருந்து மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே.வீரபாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வந்தடைந்த இப்பயணக் குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம் ஆகிய இடங்களில் மாநில மாநாட்டை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்பயணக்குழுவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், துணைத் தலைவர்கள் எம்.முத்துராமலிங்கம், சா.தோ.அந்தோணிசாமி மற்றும் ரஜினி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.
-இரா. பகத்சிங்